கடப்பாக்கம் கடற்கரை பகுதியில் சிசிடிவி பொருத்த வேண்டுகோள்
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம்குப்பத்தில், 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடலில், விசைப்படகு வாயிலாக மீன் பிடித்து வருகின்றனர்.மீன் வலை பாதுகாப்பு மையம் இல்லாததால், மீனவர்கள் அனைவரும் கடற்கரை ஓரத்தில் தனித்தனியே குடிசைகள் அமைத்து, தங்களது மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை வைப்பது வழக்கம்.கடந்த ஜன., மாதம் 19ம் தேதி, 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய மீன்பிடி வலையையும், 28ம் தேதி, இரண்டு குடிசைகளில் வைக்கப்பட்டு இருந்த, 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய மீன் வலைகளையும், மர்ம நபர்கள் எரித்து நாசமாக்கினர்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன், கடப்பாக்கம் குப்பம் பகுதியில், காளியம்மன் கோவில் உள்ளே இருந்த, 2 பீரோவை திறந்து தாலி, கம்மல், செயின் உள்ளிட்ட, 6 சவரன் நகை திருடுபோனது.இப்படி, தொடர்ந்து கடப்பாக்கம் குப்பம் பகுதியில் கொள்ளை சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், கடப்பாக்கம் குப்பம் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி தொடந்து கண்காணிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.