மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க தழுதாலிகுப்பத்தினர் எதிர்பார்ப்பு
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட தழுதாலிக்குப்பம் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.அரசு பள்ளி அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, கட்டப்பட்ட, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது.கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தினமும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு இல்லாமல் நாளடைவில் பழுதடைந்து, சிமென்ட் கான்கிரீட் உதிர்ந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது.இதையடுத்து முன்னெச்சரிக்கையாக, பேரூராட்சி சார்பாக குழாய்கள் வாயிலாக தண்ணீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டு, பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கடந்தாண்டு இடித்து அகற்றப்பட்டது.ஆனால், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.வீட்டில் சொந்தமாக ஆழ்துளைக் கிணறு வைத்திருப்போர், அந்த நீரை பயன்படுத்தி வருகின்றனர்.ஆழ்துளை கிணறு இல்லாத பொதுமக்கள், அன்றாட தேவைக்காக தண்ணீரின்றி கடும் அவதிப்படுகின்றனர்.எனவே, இடைக்கழிநாடு பேரூராட்சி நிர்வாகத்தினர் தழுதாலிக்குப்பம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.