தாம்பரம்:தாம்பரம் ரயில் நிலையத்தை, தினமும் ஒன்றரை முதல் 2 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். செங்கல்பட்டு - தாம்பரம் - கடற்கரை இடையே, 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தவிர, தென் மாவட்டங்களுக்கு தினமும், 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சேவையும் உள்ளது.சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்து அதிக மக்கள் பயன்படுத்தும், தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இதனால், கிழக்கு தாம்பரத்தில், நான்கு நடைபாதைகள் உடைய பணிமனை அமைக்கப்பட்டு, விரைவு ரயில்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.இந்த சேவைகளால், தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில், அதற்கேற்ப வசதிகளை மேம்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.தாம்பரம் ரயில் நிலையத்தில் எட்டு நடைமேடைகள் உள்ளன. விரைவு ரயில்களை கூடுதலாக இயக்க வசதியாக, மேலும் இரண்டு தண்டவாளங்கள் மற்றும் சரக்கு ரயிலுக்கான தனி பாதை அமைக்கும் பணி, இரவு, பகலாக நடந்து வருகிறது. இந்த சரக்கு ரயில் பாதை எழும்பூர் வரை அமைக்கப்படுகிறது. அதேபோல், புதிதாக சிக்னல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.இதற்கு முன், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு ரயில்கள் வந்தபின், எந்த தண்டவாளத்தில் ரயில்கள் இயக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்படும். இதையடுத்து, அந்த ரயில் அந்த தடத்திற்கு மாற்றப்படும். இதனால், ரயில்கள் இயக்குவதில் சிரமம் இருந்தது; பயணியரும் பாதிக்கப்பட்டனர்.இதை கட்டுப்படுத்தும் விதமாக, தாம்பரத்திற்கு வரும் முன்னரே, அரை கி.மீ., துாரத்தில் ரயில்களை பிரித்து அனுப்பும் வகையில் பணி நடக்கிறது. அதாவது, ஏற்கனவே உள்ள எட்டு தண்டவாளம், புதிதாக அமைக்கப்படும் இரண்டு தண்டவாளம் என, 10 தண்டவாளங்களில் எதில் ரயில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கான பாதையில் ரயில் திருப்பி விடப்படும்.இதற்காக, புதிதாக பாயின்ட் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும், ஒரு வாரத்தில் முடிந்து விடும் என, ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.