உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திடீரென பெய்த மழையால் நெல் அறுவடை பாதிப்பு

திடீரென பெய்த மழையால் நெல் அறுவடை பாதிப்பு

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட, லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகள், 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளன. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.ஏரி, ஆறு, குளம், தாங்கல், கிணறு, ஆழ்துளைகிணறு போன்ற நீராதாரங்கள் மூலமாக நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகிறது.இப்பகுதியில் அதிகப்படியாக இந்த ஆண்டு சம்பா பருவத்தில் பொன்னி, பி.பி.டி., குண்டு, எல்.என்.ஆர்., உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்கள் 15,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுள்ளன.தற்போது, நெல் கதிர்கள் முதிர்ந்து, அறுவடை பணி நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் பெய்த திடீர் மழை காரணமாக, வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நெல் அறுவடை பாதிக்கப்பட்டு உள்ளது.வறட்சியான வயல்வெளியில் 'டயர்' மூலம் இயங்கும் நெல் அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்தால், ஒரு மணி நேரத்திற்கு 1,800 முதல் 2,000 ரூபாய் செலவு ஆகும்.நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையின் காரணமாக, விளைநிலங்களில் ஈரப்பதம் உள்ளதால், டயர் மூலம் இயங்கும் நெல் அறுவடை இயந்திரம் சேற்றில் சிக்கிக் கொள்ளும் என்பதால், நெல் அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, 'பெல்ட்' வகை நெல் அறுவடை இயந்திரம் வாயிலாக 3,000 ரூபாய் கட்டணம் கொடுத்து அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் பணம் செலவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை