ஊரப்பாக்கம் அணுகு சாலையை ஆக்கிரமித்து தற்காலிக கடைகள்
கூடுவாஞ்சேரி:ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து, காரணைப்புதுச்சேரி செல்லும் அணுகு சாலையில், வாகனங்களில் வைக்கப்படும் தற்காலிக கடைகளால், தினசரி அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து காரணைப்புதுச்சேரி சிக்னல் அருகில் அணுகு சாலை உள்ளது.இந்த அணுகு சாலையை ஆக்கிரமித்து, நடைபாதை, தள்ளுவண்டி, நான்கு சக்கர வாகனங்களில் தற்காலிக கடைகள் அமைத்து, பழம் உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள அணுகு சாலையை ஆக்கிரமித்து, நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள், வாகனங்களில் வைத்து விற்பனை செய்வோர் அதிகரித்து உள்ளனர்.வாகனங்களில் வைத்து விற்கப்படும் கடைகளாலும், விற்கப்படும் பொருட்களை வாங்க வருவோர் நிறுத்தி செல்லும் வாகனங்களாலும், அப்பகுதியில் நெரிசல் அதிகரித்து, இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, பெரும் இடையூறு ஏற்படுகிறது. அருகிலேயே போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தும், இந்த ஆக்கிரமிப்பு கடைகளை கண்டுகொள்வதில்லை.எனவே, அணுகு சாலையில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றி, போக்குவரத்திற்கு இடையூறுஏற்படாதவாறு, வேறு இடத்திற்கு மாற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.