திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், பணி, கல்வி, அத்தியாவசியத் தேவைகளுக்காக, செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம் ஆகிய பகுதிகள் சென்று திரும்புகின்றனர்.ஆனால், இப்பகுதியிலிருந்து நேரடி பேருந்துகள் இயக்கப்படவில்லை. கல்பாக்கம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், கூட்ட நெரிசலில் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர். காலை புறப்படும்போதும், மாலை திரும்பும்போதும், குறைவான பேருந்துகளே இயங்குவதால், கடுமையாக அவதிக்குள்ளாகின்றனர்.தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு, ஏராளமான மாநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்தடத்தின் தொலைவு 30 கி.மீ., மட்டுமே. மாநகர் பேருந்து சேவை, சென்னை பகுதியிலிருந்து 50 கி.மீ., வரை இயக்க அனுமதி உண்டு.தாம்பரம் - திருக்கழுக்குன்றம் இடையே, 45 கி.மீ., தொலைவே உள்ளதால், செங்கல்பட்டு வரை இயக்கும் மாநகர் பேருந்துகளை, திருக்கழுக்குன்றம் வரை நீட்டிக்கலாம் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.அவ்வாறு நீட்டிக்கப்பட்டால், இப்பகுதி பயணியர் பெரிதும் பயன்பெறுவர். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.