| ADDED : ஏப் 28, 2024 01:50 AM
மாமல்லபுரம்:அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரை, மாமல்லை கழிப்பறையில் இலவசமாக அனுமதிக்க மறுத்ததால், ஊழியரை அவர்கள் முற்றுகையிட்டனர்.சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு, செங்கல்பட்டில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருவான்மியூர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்தும், மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில், பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் இயற்கை உபாதைக்காக, அருகில் உள்ள பேரூராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர்.பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை இலவசமாக அனுமதிப்பது தொடர்பாக, இருதரப்புக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்படும்.நேற்று காலை அரசு பேருந்து நடத்துனர் ஒருவர், கழிப்பறை சென்றபோது, இலவச அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து, அவர் மற்ற பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் தெரிவித்தார்.அவர்கள் ஊழியரை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த பேரூராட்சி சுகாதார பிரிவினர், அவர்களை சமாதானம் செய்து, இலவசமாக அனுமதிப்பதாக கூறினர்.அதன்பின், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கலைந்து சென்றனர்.