| ADDED : ஜூலை 15, 2024 05:40 AM
பெரம்பூர் : பெரம்பூர், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி,28. இவர், நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.கடந்த 13ம் தேதி, தன் குழந்தையை பெரம்பூர் பி.பி.சாலையிலுள்ள தாய் வீட்டில் விட்டுவிட்டு, பணிக்கு செல்வதற்காக அதே சாலை சந்திப்பில் நின்றிருந்தார். அப்போது, 'பைக்'கில் வந்த மர்ம நபர், சுவாதி கழுத்தில் அணிந்திருந்த 4.5 சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பினார்.இதைப் பார்த்த, வியாசர்பாடியைச் சேர்ந்த பிரேம்குமார்,33, என்பவர், செயின் பறித்த மர்ம நபரை 'பைக்'கிலேயே விரட்டிச் சென்றார்.கக்கன்ஜி காலனி அருகே, பொதுமக்கள் உதவியுடன் மர்ம நபரை மடக்கிப் பிடித்த பிரேம்குமார், நகையுடன் செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.விசாரணையில் பிடிபட்டவர், வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த யுவராஜ், 43, என தெரிந்தது. அவரிடமிருந்து 'யமஹா' பைக்கை பறிமுதல் செய்த போலீசார், யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.