திருக்கழுக்குன்றம் பள்ளி கட்டடம் இழுபறிக்கு பின் பணிகள் துவக்கம்
திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றம், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவது, ஓராண்டு இழுபறிக்குப் பின், தற்போது கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது.திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரில், அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில், தேவைக்கேற்ப கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, பெற்றோர்வலியுறுத்தினர். இதை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம், பள்ளி கட்டடம் கட்ட, சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்திடம் பரிந்துரைத்தது. நிலைய நிர்வாகம், 1.47 கோடி ரூபாய் மதிப்பில் தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம் என, தலா இரண்டு வகுப்பறைகளுடன் கட்ட அனுமதி அளித்தது. ஒப்பந்ததாரர் பூமிபூஜை நடத்தி, பணிகளை துவக்கிய போது, பல்வேறு இடையூறு ஏற்பட்டது.பள்ளி வளாகத்தில் உள்ள பழைய சத்துணவு சமையலறை கட்டடத்தை இடித்து, அப்பகுதியையும் ஒருங்கிணைத்து, வகுப்பறை கட்ட முடிவெடுக்கப்பட்டது.பழைய கட்டடத்தை இடிப்பதற்கு, வட்டார வளர்ச்சி நிர்வாகம், ஒன்றிய குழு கூட்ட தீர்மானம் நிறைவேற்றி, டெண்டர் அளித்தது. அப்பகுதி வார்டு உறுப்பினர் நரசிம்மன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் என்பவர் என்பதால், தி.மு.க.,வினர், பழைய கட்டடத்தை இடிக்க விடாமல் தடுப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. இதனால் திட்டமும் கேள்விக்குறியாகி, கைவிடப்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அணுமின் நிலைய நிர்வாகத்திடம், வார்டு கவுன்சிலர் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம், தொடர்ந்து முறையிட்டார். தற்போது தீர்வு காணப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.