| ADDED : ஏப் 26, 2024 08:32 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில், சதுரங்கப்பட்டினம் சாலை, மாமல்லபுரம் சாலை ஆகியவை, போக்குவரத்திற்கு இன்றியமையாதவை.உள்ளூர் வாகனங்கள் மட்டுமின்றி, கல்பாக்கம், மாமல்லபுரம், மதுராந்தகம் என, பிற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும், இவ்வழியில் கடக்கின்றன.இத்தகைய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், மிகவும் குறுகியுள்ளன. இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் நேரத்தில், டிப்பர் லாரிகள் அதிக அளவில் கடக்கின்றன.தாறுமாறாகவும், அதிவேகத்திலும் செல்லும் டிப்பர் லாரிகளால், அகலம் இல்லாத சாலையில், எதிரெதிர் திசையில் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது, கடக்க முடியாமல் போக்குவரத்து முடங்குகிறது.மற்ற வாகனங்கள் நீண்ட துாரம் சாலையில் தேங்குகின்றன. இதனால், மருத்துவ அவசரத்திற்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.அதிவேகமாகச் செல்லும் லாரிகளால், விபத்து அபாயமும் உள்ளது. அதனால், நகர்ப் பகுதிக்குள் டிப்பர் லாரிகள் செல்வதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.