உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிபோதை பரிசோதனை அதிகாலையில் அபராத வசூல் போக்குவரத்து போலீஸ் புது ஐடியா

குடிபோதை பரிசோதனை அதிகாலையில் அபராத வசூல் போக்குவரத்து போலீஸ் புது ஐடியா

சென்னை : மது போதையில் வாகனங்கள் ஓட்டுவோரால் விபத்து ஏற்படுவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். வாகன ஓட்டிகள் 'பிரீத் அனலைசர்' கருவி வாயிலாக சோதனை நடத்தி, மது அருந்தியது உறுதி செய்யப்பட்டால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். ரத்தத்தில், 30 மில்லிக்கும் அதிகமாக ஆல்கஹால் இருந்தால் தான் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், கனரக வாகன ஓட்டிகளை குறி வைத்து, அதிகாலை, 4:00 - 6:00 சோதனை நடத்துவது போல, போக்குவரத்து போலீசார் அபராத வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரீத் அனலைசர் கருவி

இது குறித்து கனரக வாகன உரிமையாளர்கள் கூறியதாவது: வாகன ஓட்டிகளிடம் சோதனை செய்யும் பணியில் சட்டம் - ஒழுங்கு போலீசாரும் ஈடுபடுகின்றனர். அவர்கள், கடந்த மார்ச் மாதம், சென்னையில் கனரக வாகன ஓட்டி ஒருவரிடம் பிரீத் அனலைசர் கருவி வாயிலாக சோதனை செய்தனர். அவரின் ரத்தத்தில், 45 மில்லி ஆல்கஹால் இருப்பதாக காட்டியது. இதனால், அவருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், வேறொரு பிரீத் அனலைசர் கருவியில் சோதனை செய்த போது, ஆல்கஹால் அளவு பூஜ்ஜியம் காட்டியது. அவர் மதுவே குடிக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால், அந்த கருவிகளின் செயல் திறனை சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, கனரக வாகன ஓட்டிகளை குறி வைத்து, அபராத வசூல் வேட்டை நடக்கிறது.

இக்கட்டான சூழல்

கனரக ஓட்டுனர்கள் குறித்த இடத்திற்கு, குறித்த நேரத்தில் சென்றடைய வேண்டிய கட்டாயத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு குறித்தெல்லாம் தெரியாது. ஒரு வேளை அந்த ஓட்டுனர் இரவில் மது குடித்து இருந்தாலும், அதிகாலையில் பரிசோதனை செய்யும் போது, ரத்தத்தில் குறைந்த அளவு தான் ஆல்கஹால் இருக்கும். வாகன ஓட்டுனர்கள் இக்கட்டான சூழல், அவசரமாக செல்ல வேண்டிய நிலையை பயன்படுத்தி, வசூல் வேட்டை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

உரிமையாளர்கள் புகார்

பெட்ரோலிய லாரிகளிடம் அடாவடியாக அபராதம் வசூலிப்பதாக, அவற்றின் உரிமையாளர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.சென்னை போலீஸ் கமிஷனர் அருண், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் ஆகியோரிடம், சென்னை ஆசனுார் பெட்ரோலிய டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:தண்டையார்பேட்டையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்தில் இருந்து, நுாற்றுக்கணக்கான டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை சென்னை முழுதும் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக ஒரு டிரிப்புக்கு, 2,200 -- 3,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.ஆனால், சென்னை பகுதிக்குள் பெட்ரோலிய லாரிகள் சென்றால், போக்குவரத்து போலீசார் அதிக கெடுபிடிகளை விதிக்கின்றனர். 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை அபராத கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், வருமானத்தின் பெரும் பகுதியை போக்குவரத்து போலீசாரிடம் கொடுக்கும் நிலையே உள்ளது. எனவே, குப்பை லாரிகள், குடிநீர் லாரிகளை போலவே, அத்தியாவசிய பட்டியலில் உள்ள பெட்ரோலிய லாரிகளையும் சென்னை பகுதிக்குள் செல்ல போக்குவரத்து போலீசார் அனுமதி அளிக்க வேண்டும்.எண்ணுார் - அத்திப்பட்டு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. மேடு, பள்ளங்களான இப்பகுதியில் பெட்ரோலிய டேங்கர் லாரிகள் எப்போது கவிழ்ந்து விழுமோ என்ற அச்சத்தில் வண்டியை ஓட்டும் நிலை உள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படும் முன் சாலைகளை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !