சதுப்பு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி சிமென்ட் கழிவு கொட்டிய லாரி பறிமுதல்
சோழிங்கநல்லுார் சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பிரதான சாலையின் கிழக்கு திசையில், சதுப்பு நிலம் மற்றும் பகிங்ஹாம் கால்வாய் உள்ளது. இந்த சதுப்பு நிலத்தில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டி ஆக்கிரமிக்கப்படுகிறது. ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணிகள் அதிகம் நடக்கின்றன. இந்த பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனங்கள், கான்கிரீட் கலவையின் கழிவான சிமென்ட் கலவையை, சதுப்பு நிலத்தில் கொட்டுகின்றன. அதுவும், 5 அடி பள்ளம் எடுத்து அதில், இரவு நேரத்தில் கழிவு கொட்டப்படுகிறது. அவை, கெட்டியாகி விட்டதால், அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சதுப்பு நிலமும் நாசமடைகிறது. நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியாக, சிமென்ட் கலவை கொட்டிசமன்படுகிறதா என்றசந்தேகமும் அப்பகுதியின்ரிடையே எழுந்துள்ளது.இதுகுறித்து, அப்பகுதியினர் இணைந்து மாநகராட்சி அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, டி.என்: 73 பிஇசட் 9349 என்ற எண் உள்ள, சிமென்ட் கலவை கழிவு கொட்டிய லாரியை, அதிகாரிகள் நேற்று பறிமுதல்செய்தனர். ஏற்கனவே கழிவு கொட்டிய லாரிகள் குறித்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, செம்மஞ்சேரி போலீசாரும் விசாரிக்கின்றனர்.