மண் புழுதி பறக்கும் சாலைகளில் சுற்றுச்சூழல் மாசு காற்றின் தரம் அறிய மாசு அளவீட்டு கருவி பொருத்தப்படுமா?
திருமுக்கூடல், திருமுக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில், அரசு அனுமதி பெற்ற கிரஷர் மற்றும் தனியார் கல் குவாரிகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, காற்றின் வாயிலாக குடியிருப்பு மற்றும் சாலைகளில் பரவுவதால், சுற்றுச்சூழல் மாசடைந்து, பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக, கிராமவாசிகள் பலரும் தொடர்ந்து புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, திருமுக்கூடல் பாலாற்று பாலம் மற்றும் அதை சுற்றியுள்ள மதுார், அருங்குன்றம், சிறுதாமூர், பழவேரி, பினாயூர் ஆகிய கிராமங்களில், சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் இத்தகைய பிரச்னை நீண்ட காலமாக தொடர்கிறது. இப்பகுதி சாலையோரங்களில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து புகை மற்றும் மண் புழுதி பரவுதலும், தார்ப்பாய் போர்த்தாத லோடு வாகனங்களில் இருந்து பறக்கும் புழுதி, சாலையில் படிந்த மண்ணால் ஏற்படும் புழுதி என, தொடர் பிரச்னை நிலவி வருகிறது. இத்தகைய மண் புழுதியால், சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதோடு, குழந்தைகள் முதல் பெரியோர் வரை மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இப்பகுதி சாலைகளில், மாசு அளவீட்டு கருவி பொருத்தி, சுவாசிக்கும் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கூறியதாவது:மாசு பிரச்னை நிலவுவதாக குறிப்பிடும் பகுதிகளில், நிரந்தமாக மாசு அளவீட்டு கருவி பொருத்த இயலாது. மாசு பிரச்னை உள்ள இடத்தை குறிப்பிட்டு புகார் அளிக்கும் பட்சத்தில், அவ்விடத்தில் காற்று மாசு குறித்த அளவை கணக்கிடலாம். அந்த முடிவின் அடிப்படையில், காற்று மாசுபடுவதை குறைக்க, அரசு பரிந்துரையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.