கல்பாக்கம்:கல்பாக்கத்தில், விழுப்புரம் கோட்டம், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை இயங்குகிறது. இதைச் சேர்ந்த, தடம் எண் 108 அரசுப் பேருந்து, கல்பாக்கத்தில் இருந்து சென்னைக்கு, 30 நிமிடங்களுக்கு ஒன்று என, நீண்டகாலம் இயக்கப்பட்டது.திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியில், இப்பேருந்து இயங்கியது. கடந்த 10 ஆண்டுகளாக,சென்னை தவிர்த்து, தாம்பரம் வரையே இப்பேருந்து இயக்கப்படுகிறது. கல்பாக்கம் மற்றும் சுற்றுப் புறப் பகுதியினர், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அத்தியாசிய தேவைகளுக்காக, தினமும் செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம் பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர். இங்கிருந்து காலையில் வெளியூர் செல்லவும், மாலையில் திரும்பவும் போதிய பேருந்துகள் இல்லை.நீண்டநேர இடைவெளியில், குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணியர் நெரிசலுடன் செல்கின்றனர். தாம்பரம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, நேரடி பேருந்து இல்லாத நிலையில், பல பேருந்துகளில் மாறி மாறி சென்று அவதிக்குள்ளாகின்றனர்.இப்பாதிப்பை தவிர்க்க, கல்பாக்கம் - தாம்பரம் இடையே, கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.