| ADDED : ஜூலை 11, 2024 12:39 AM
செங்கல்பட்டு:கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், கணவனை இழந்தோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் உறுப்பினராக பதிவு செய்யலாம். இதுகுறித்து கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ளகணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள், நலிவுற்ற பெண்கள் உள்ளிட்டோருக்கு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு,சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் வாரியத்தின் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன.கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்திற்கென, தற்போது உருவாக்கப்பட்டுள்ள www.tnwidowwelfareboard.in.gov.inஎன்ற இணையதள முகவரியில் உள்ள, webApplication வாயிலாக தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெறலாம்.இ- - சேவை மையங்களிலும் தங்களின் விபரங்களை பதிவு செய்து உறுப்பினராகலாம். சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் செய்ய மானியம் போன்ற உதவிகளை எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.