செங்கல்பட்டு:தமிழகம் முழுதும் பிளஸ் - 2 அரசு பொதுத் தேர்வு, மார்ச் 1ம் தேதி துவங்கி, 22ம் தேதியும், பிளஸ் - 1 தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்கி, 25ம் தேதியும் நிறைவு பெறுகின்றன.செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், 79 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 21 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 215 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என, மொத்தம் 315 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.இதில், 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில், பிளஸ் 2 தேர்வில், 25,485 பேரும், பிளஸ் 1 தேர்வில், 28,296 பேரும் என, 53,781 மாணவ - மாணவியர், பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.செங்கல்பட்டு, மதுராந்தகம், சேலையூர், பல்லாவரம் ஆகிய நான்கு இடங்களில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, 24 மணி நேரமும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.முதன்மை கண்காணிப்பாளர்கள் 85 பேரும், துறை அலுவலர்கள் 85 பேரும் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் 138 பேரும், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 1,708 பேரும் பணியில் ஈடுபடுகின்றனர்.வினாத்தாள் கட்டுக்கள் வாகனங்கள் வாயிலாக எடுத்துச்செல்லும் போது, சுங்கச்சாவடி கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில், 21 வழித்தடங்களில், வினத்தாள் எடுத்து செல்லப்படுகிறது. இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் கூறியதாவது:மாவட்டத்தில், 85 தேர்வு மையங்களில், குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுங்கச்சாவடிகளில் வினாத்தாள் வாகனங்களை எளிதில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.