மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் மாமல்லையில் எதிர் தரப்பினர் 8 பேர் கைது
மாமல்லபுரம்,:கொக்கிலமேடில், மீனவர்களை தாக்கியது தொடர்பாக, எதிர் தரப்பு மீனவர்கள் எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடைச் சேர்ந்த மீனவர் வெங்கடேசன் மனைவி ராஜாத்தி; ஊராட்சி துணைத் தலைவர்.கழிவுநீர் கால்வாயை உயர்த்தி அமைப்பது தொடர்பாக இவருக்கும், அதே பகுதி மீனவர்கள் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.இதுதொடர்பாக ராஜாத்தி போலீசில் புகார் அளித்து, மீனவ சபையினர் மிரட்டலால் திரும்பப் பெற்றார். இதையடுத்து, ராஜாத்தி உள்ளிட்ட ஏழு குடும்பத்தை, ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக மீனவ சபையினர் ஒதுக்கி, மீன் பிடிக்கவும் தடை விதித்தனர்.இதுகுறித்து வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தி சமாதானம் செய்தும், கட்டுப்பாட்டை விலக்காமல் இவர்களை அவ்வப்போது தாக்கியதாக கூறப்படுகிறது.கடந்த 16ம் தேதி இரவும், திருவேங்கடம் உள்ளிட்ட சிலரை, எதிர் தரப்பு மீனவர்கள் தாக்கியுள்ளனர். வீடு புகுந்து, பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளனர்.இதுகுறித்து சுரேஷ் என்பவரது மனைவி அபிராமி, திருவேங்கடமும், எதிர் தரப்பு மீனவர்கள் சார்பில் பழனி ஆகியோர், மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தனர்.இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அபிராமி அளித்த புகாரின்படி மகாதேவன், 39, அய்யப்பன், 30, மோகேஷ், 20, சந்தோஷ், 22, முருகன், 34, மோகன்ராஜ், 26, ஆகியோரை சுற்றி வளைத்து, நேற்று கைது செய்தனர்.பழனி அளித்த புகாரின்படி ராமலிங்கம், 41, முருகன், 43, ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பலரை தேடுகின்றனர்.