கனமழை பெய்தும் நிரம்பாத 80 சதவீத ஏரிகள் கிரிக்கெட் மைதானம் கண்துடைப்பிற்காக துார்வாரியது அம்பலம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்தும், 80 சதவீத ஏரிகள், நீரின்றி வறண்டு, கிரிக்கெட் மைதானங்களாக உள்ளன. ஏரிகளை முறையாக துார்வாராமல், கண்துடைப்பிற்காக துார்வாரியதே இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில், 589 ஏரிகள் மற்றும் 2,512 குளங்கள் உள்ளன. இந்த ஏரிகள், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் செடிகள், ஆகாயத்தாமரை படர்ந்து, கரையோரங்கள் பலவீனமாக உள்ளதாக, விவசாயிகள் தொடர் புகார் அளித்து வந்தனர். இதையடுத்து, ஏரிகளை துார்வார, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், கடந்த ஏப்ரலில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 200 ஏரிகளை துார்வார, 16.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த ஏப்., 16ம் தேதி,'டெண்டர்' விடப்பட்டது. கடந்த மே 16ம் தேதி, ஏரிகளில் துார்வாரும் பணிகள் துவக்கப்பட்டன. அப்போது, ஏரிகள் துார்வாரும் பணியில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், கண்காணிப்பு மற்றும் வெளிப்படைத் தன்மை அவசியம் வேண்டும் என, பல தரப்பினரும் வலியுறுத்தினர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஏரிகளில் துார்வார பூமி பூஜை மட்டும் போடப்பட்டதே தவிர, துார்வாரும் பணிகள் ஒரு சதவீதம் கூட நடக்கவில்லை. கடந்த 20 நாட்களில் நல்ல மழை பெய்தும், 80 சதவீத ஏரிகள் நீரின்றி, வறண்டுள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் 200 ஏரிகளை துார்வார, 16.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த மே 16ம் தேதி, திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஏரியில், பூமி பூஜையுடன் பணிகள் துவக்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ்,''ஏரி துார்வாரும் பணி துவங்கும் போது, திட்டத்தின் பெயர், பணியின் பெயர், ஒதுக்கப்பட்டுள்ள நிதி, ஒப்பந்ததாரர் பெயர் ஆகியவற்றை, பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும்,'' என்றார். தவிர, ஏரிக்கரையோரம் பனை மரங்கள் நடவு செய்யவும், கரை வெளிப்பகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடவும் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 5ம் தேதி, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரியில் உள்ள சித்தேரியில், துார்வாரும் பணி பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியிலும், அப்போதைய கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் கண்துடைப்பிற்காக,'பொக்லைன்' இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சிறு குழி மட்டும் தோண்டப்பட்டது. அதன் பின், துார்வாரும் பணிகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால், ஏரிகள் துார்வாரும் பணிகள் முறையாக நடப்பது போல், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பரப்புரை செய்து, மக்களை நம்ப வைத்தது. இந்நிலையில், தற்போது பெய்த மழைக்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் 80 சதவீத ஏரிகளில், கால் பங்கு கூட நீர் நிரம்பவில்லை. ஏரிகள் துார்வாரப்பட்டிருந்தால், கடந்த 15 நாட்கள் பெய்த மழையில், 70 சதவீதம் ஏரிகள் நிரம்பியிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். முறைகேடுக்கு சித்தேரி சான்று இதுகுறித்து, ஊனமாஞ்சேரி கிராம மக்கள் கூறியதாவது: ஊனமாஞ்சேரியில் உள்ள சித்தேரி, 250 ஏக்கர் பரப்பில் இருந்தது. தமிழ்நாடு காவல் துறை பயிற்சி மையம் துவக்க, 136 ஏக்கர் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டது. தற்போது, 80 ஏக்கர் பரப்பில் தான் ஏரி உள்ளது. சித்தேரியை துார்வார அரசு நிதி ஒதுக்கி உள்ளதாகக் கூறி, கடந்த ஜூன் 5ம் தேதி, அப்போதைய செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், பூமி பூஜையும் நடத்தப்பட்டது. அதன் பின், எந்த பணியும் நடக்கவில்லை. ஏரியை துார்வார எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. தற்போதும், ஏரியைச் சுற்றி குப்பை கழிவு கொட்டப்பட்டு, மாசடைந்த நிலையில் தான் சித்தேரி உள்ளது. கடந்த மாதம் பல நாட்கள் கனமழை பெய்தும், ஏரியில் 10ல் ஒரு பங்கு கூட, தண்ணீர் நிரம்பவில்லை. இப்போதும், மாடுகள் மேய்ச்சல் நிலமாகவும், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் மைதானமாகவும் தான் சித்தேரி உள்ளது. எனவே, 200 ஏரிகள் துார்வாரப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறுவது தவறு. இந்த பணியில், பெரும் முறைகேடு நடந்துள்ளதற்கு சான்றாக, ஊனமாஞ்சேரி சித்தேரி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.