அணுகுசாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் விபத்து அபாயம்
மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் சாலை 25 கி.மீ., துாரம் கொண்ட 6 ஆறு வழி மாநில நெடுஞ்சாலை.இந்த சாலையை தினமும், 40,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் திருக்கச்சூர், ஒரகடம் பகுதிகளில் அணுகு சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, சர்வீஸ் சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு கடும் அபராதம் விதிப்பதுடன், பறிமுதல் செய்ய வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:திருக்கச்சூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகில், சர்வீஸ் சாலை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கிராமத்தில் இருந்து நெடுஞ்சாலைக்கு வரும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர்.இந்த சாலையில் பல இடங்களில் முறையற்ற வகையில் வாகனங்களை நிறுத்தி விட்டு, பல மணி நேரம் கழித்து டிரைவர்கள் வாகனங்களை எடுக்கின்றனர்.இதன் காரணமாக திருக்கச்சூர், பெரியார் நகர், ஒரகடம் பகுதிகளில் விபத்து தொடர்கதையாக உள்ளது. எனவே, இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.