சிதிலமடைந்த வி.ஏ.ஓ., அலுவலகம் கூடலுாரில் நிர்வாக ஆவணங்கள் நாசம்
அச்சிறுபாக்கம்:கூடலுார் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலுார் ஊராட்சியில், நடுநிலைப் பள்ளி அருகே, பெரும்பாக்கம் குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டடம் உள்ளது.கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான கட்டடம் என்பதால் சிதிலமடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், சமீபத்தில் 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த கனமழையில், அலுவலகத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு, அபாய நிலையில் உள்ளது.இதன் காரணமாக, மழைக்காலங்களில் கிராம நிர்வாக பதிவேடுகள், ஆவணங்கள் நனைந்து நாசமாகி வருகின்றன. முக்கிய ஆவணங்களை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே பகுதியில் புதிதாக கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.