உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விவசாயிகளுக்கு தனி அடையாள எண் விரைந்து பெற வேளாண்துறை வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு தனி அடையாள எண் விரைந்து பெற வேளாண்துறை வலியுறுத்தல்

செய்யூர்:நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆதார் எண் போல, தனி அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு மட்டுமன்றி, மானிய விலை உரம், கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில், அனைத்து விபரங்களையும் மின்னணு முறையில் சேகரித்து, விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையில், வேளாண் அடுக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் பதிவு விபரங்களுடன் ஆதார் எண், மொபைல்போன் எண், நில உடைமை விபரங்களையும் இணைக்கும் வகையில், வேளாண் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.இதற்காக, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இப்பணியை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.சிட்டா, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போனுடன் சென்று, விபரங்களை பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, தனி அடையாள எண் வழங்கப்படுகிறது.தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே, வரும் காலங்களில் மத்திய அரசு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள், பிரதமரின் விவசாய உதவித்தொகை, பயிர்க்கடன், கிஸான் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.கடந்த மாதம் 31ம் தேதிக்குள், விவசாயிகள் தங்கள் விபரங்களை தாக்கல் செய்து, தனி அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.எனவே, நில ஆவணங்களை பதிவு செய்யாத விவசாயிகள், அருகிலுள்ள பொது சேவை மையம், வேளாண் உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் நில உடைமைகள், ஆதார், மொபைல்போன் எண் போன்ற விபரங்களை வழங்கி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.செய்யூர் தாலுகாவில் மொத்தமுள்ள 20,000 விவசாயிகளில் இதுவரை, 70 சதவீத விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் ஏப்., 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டுமென, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !