மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
மதுராந்தகம்'மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராத தி.மு.க., அரசையும், நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, மதுராந்தகத்தில் அ.தி.மு.க.,வினர் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுராந்தகம் நகராட்சியில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராமல், மெத்தனமாக இருந்து வரும் தி.மு.க., அரசு மற்றும் மதுராந்தகம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நகர அ.தி.மு.க., சார்பில், மதுராந்தகம் பழைய நகராட்சி அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. கழக செயலர் சரவணன் முன்னிலை வகித்தார். மதுராந்தகம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மரகதம் தலைமையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலர் ஆறுமுகம், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாவது: மதுராந்தகம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடு களால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் நகராட்சியில், வாரத்திற்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிநீர் குழாய் மற்றும் கிணறு அமைக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை பணிகள் முடியாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் குப்பையை சேகரிக்க தனியாரிடம் 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. இவர்கள், நான்கு நாட்களுக்கு ஒரு முறை குப்பையை அகற்றுவதால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மக்களுக்கு போதிய வசதிகளை செய்து தராத நிலையில் சொத்து வரி, வீட்டு வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை கடுமையாக உயர்த்தி உள்ளனர். இவ்வாறு, ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதில், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட அ.தி. மு.க.,வினர் நுாறுக்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர்.