உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்தேரி ஏரி சீரமைப்பு பணியில் முறைகேடு நடந்ததாக...குற்றச்சாட்டு: மண் திருட்டு, நிதி இழப்பை தடுக்க நடவடிக்கை தேவை

சித்தேரி ஏரி சீரமைப்பு பணியில் முறைகேடு நடந்ததாக...குற்றச்சாட்டு: மண் திருட்டு, நிதி இழப்பை தடுக்க நடவடிக்கை தேவை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த ஏரி சீரமைப்பு பணியில் முறைகேடு நடந்துள்ளதாக, தகவல் பெறும் உரிமை சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது. இதனால், புதிதாக 16 கோடி ரூபாயில், 200 ஏரிகளில் நடந்துவரும் ஏரி சீரமைப்பு பணிகளை, மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்துார், சித்தாமூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய எட்டு ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள, 620 ஏரிகள், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் செடி, கொடிகள் முளைத்து, கரையோரங்கள் பலவீனமாக உள்ளதாக, விவசாயிகள் தொடர் புகார்கள் அளித்து வந்தனர்.இதையடுத்து, கடந்த ஆண்டுகளில் ஒரு சில ஏரிகளில், துார்வாரி, கரையை பலப்படுத்தும் பணி நடந்தது.இந்த பணி விபரம் குறித்து, தகவல் பெறும் உரிமை சட்டம் வாயிலாக, சமூக ஆர்வலர் ஒருவர் அறிக்கை பெற்றார்.இதன் வாயிலாக ஆராயும்போது, பணியில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக, சமூக ஆர்வலர் குற்றம்சாட்டு எழுப்பியுள்ளார்.இதுகுறித்து, சமூக ஆர்வலர் தினகரன், 44, என்பவர் கூறியதாவது:கடந்த 2019ம் ஆண்டு, தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் உள்ள சித்தேரியை புனரமைத்து, அதில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க, 3.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 2023 ஜூன் மாதம் வரையில் பணிகள் நடைபெறவில்லை.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு செய்து, சித்தேரியில் சுற்றுச்சூழல் பூங்கா பணிகள் எந்த அளவிற்கு நடந்துள்ளன என்ற விபரம் கேட்கப்பட்டது.அதன்படி பெறப்பட்ட ஆவணங்களை சரிபார்த்த போது, திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது, அனைத்து பணிகளுக்கும் 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் முடிந்து விட்டதாகவும், அதற்கான தொகை ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், சித்தேரியில் நடைபாதையைத் தவிர, வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை. அத்துடன், ஏரி நீரை துாய்மைப்படுத்துதல், கரைகளை அகலப்படுத்துதல், பறவைகள் தங்குவதற்கு குட்டித்தீவு மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், அந்த பணிகளை செய்து முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு, 2.56 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில், மேற்குறிப்பிட்ட எந்த பணிகளும், சித்தேரியில் நடக்கவில்லை. தற்போது வரை ஏரியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. கழிவுநீர் கலக்கிறது. சீமை கருவேல மரக்கன்றுகள் வளர்ந்து நிற்கின்றன.'ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல், ஏரியை துார் வாரி சீரமைப்பதாக கூறி பல கோடி ரூபாய் ஒதுக்கி முறைகேடு நடந்துள்ளது.இந்நிலையில், மாவட்டத்தின் ஏழு ஒன்றியங்களில் உள்ள 200 ஏரிகளை, 16.10 கோடி ரூபாயில் துார் வாரும் பணிக்கு, மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு ஒன்றியத்திலும் எந்தெந்த ஏரிகள் துார் வாரப்படுகின்றன, ஒவ்வொரு ஏரிக்கும் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற விபரங்கள் வெளியிடவில்லை. இது குறித்த அறிவிப்பு, சம்பந்தப்பட்ட ஊராட்சி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.ஏரிகள் துார் வாரப்படுவதிலும், கரைகளை பலப்படுத்தப்படுவதிலும், பலவித முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது.குறிப்பாக, ஏரியை ஆழப்படுத்தும் போது கிடைக்கும் உபரி மண், ஏரியின் கரையிலேயே கொட்டப்பட வேண்டும். ஆனால் இந்த மண், சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்கப்பட அதிகம் வாய்ப்புண்டு. இதற்கு, கடந்த கால சான்றுகள் அதிகமாக உள்ளன. தவிர, துார் வாரும் பணியில் எந்தெந்த பணிகள் இடம்பெற்றுள்ளன என்ற விபரமும் வேண்டும்.எனவே, கடந்தாண்டுகளில் நடந்த ஏரி சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, மோசடி இருந்தால், ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது மேற்கொள்ளப்படும் துார் வாரும் பணிகள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். மாவட்ட அதிகாரிகள் இப்பணிகளை முறையாக கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஏரியை ஆழப்படுத்தும் போது கிடைக்கும் உபரி மண், ஏரியின் கரையிலேயே கொட்டப்பட வேண்டும்.ஆனால் இந்த மண், சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் விற்கப்பட அதிகம் வாய்ப்புண்டு. இதற்கு, கடந்த கால சான்றுகள் அதிகமாக உள்ளன.

கண்காணிப்பு அவசியம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் புனிததோமையார் மலை தவிர்த்து, மீதமுள்ள ஏழு ஒன்றியங்களில், மிகவும் மோசமான நிலையில் உள்ள, 200 ஏரிகளை துார் வார, 16.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 16ம் தேதி துவக்கப்பட்டன.இந்நிலையில், ஏரிகள் துார் வாரும் பணியில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால், அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும், பணிகளில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டுமெனவும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை