திருப்போரூர் ஆதார் மையத்தில் கூடுதல் கவுன்டர் அவசியம்
திருப்போரூர்:திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் உள்ளது. புதிய ஆதார் அட்டை பதிவு, முகவரி, பெயர், மொபைல் போன் எண் உள்ளிட்டவை மாற்ற, தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.மேலும், ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் ஆதாரை புதுப்பிக்க, ஆதார் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில், வழக்கமாகவே, ஒரு நாளைக்கு 40க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் வழங்கப்படுவதால், கூட்டத்தை தவிர்க்க, காலை 8:00 மணிக்கே, 100க்கும் மேற்பட்டோர் தாலுகா அலுவலகம் வந்து, வரிசையில் நிற்கின்றனர்.முதலில் வருவோர் மட்டுமே சேவையை பெற முடிகிறது. மற்றவர்கள், வேலை முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சூழல் உருவாகிறது.மேற்கண்ட ஆதார் புதுப்பிப்பு அறிவிப்பால், வழக்கத்தை விட தினசரி தாலுகா அலுவலகத்தில் ஏராளமானோர் குவிகின்றனர். ஒரு கவுன்டர் மட்டும் இருப்பதால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.எனவே, திருப்போரூர் தாலுகா ஆதார் சேவை மையத்தில், கூடுதல் கவுன்டர்களை ஏற்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.