கார் - டாடா ஏஸ் விபத்தில் மேலும் ஒருவர் பலி
தஞ்சாவூர்:சென்னை, பெருங்களத்துார், விஷணு நகரை சேர்ந்தவர் ஸ்டாலின், 36. இவர், தன் மனைவி துர்கா, 32, மகள் இதழனிதுாரிகா, 3, துர்காவின் தந்தை குமார், 57, தாய் ஜெயா, 55, துர்காவின் தங்கை மோனிஷா, 30, ஆகியோருடன் நேற்று முன்தினம், தஞ்சாவூர் பெரியகோவிலுக்கு 'ரொனால்ட் டிரைபர்' காரில் சென்றார்.அப்போது, தஞ்சாவூர் - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, உதராமங்கலத்தில் இருந்து நெல் நாற்றுக்களை ஏற்றியபடி, எதிர்திசையில் வேகமாக வந்த, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனம், ஸ்டாலின் ஓட்டி வந்த கார் மீது, நேருக்கு நேர் மோதியது.இதில், துர்கா, இதழனிதுாரிகா, குமார், ஜெயா ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர். மோனிஷா, ஸ்டாலின், டாடா ஏஸ் டிரைவர் விக்னேஷ், 30, இளங்கோ, 50, ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிகிச்சை பலனின்றி, இளங்கோ நேற்று காலை உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.