/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அடுத்த பரனுாரில், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் வாகனங்களின் பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை பெற வரும் மக்களிடம், இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்கப்படுவதாக, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு தரப்பில் புகார்கள் வந்தன. இதையடுத்து, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சரவணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 11:00 மணிக்கு மேற்கண்ட அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மாலை 6:00 மணி வரை நடந்த சோதனையின்போது, அதிகாரிகள், இடைத்தரகர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.