மறைமலை நகர் நகராட்சியில் எரியாத மின்விளக்குகள் சமூக விரோதிகளும் சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சி, தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நகராட்சி, 16 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, 21 வார்டுகளை கொண்டு உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 80,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில், மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்து, அதிக அளவில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் சுற்றியுள்ள கருநிலம், சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் மறைமலை நகருக்கு வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து தெருக்கள், சாலை சந்திப்பு, நெடுஞ்சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தெருவிளக்குகள் மற்றும் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்விளக்குகள், இரவு நேரங்களில் சிப்காட் பகுதி, கூடலுார் ஏரிக்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எரிவதில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது: மறைமலை நகர் நகராட்சி சார்பில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டாலும், மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதிகளில் கூட போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உள்ளது. சிப்காட் செல்லும் பெரியார் சாலை, காமராஜர் சாலை, முத்துராமலிங்கத்தேவர் சாலைகளில் மூன்றில் ஒரு தெருவிளக்குகள் எரியாமல் உள்ளன. காட்டாங்கொளத்துார், காட்டூர், திருக்கச்சூர், கீழக்கரணை பகுதிகளிலும் இதே நிலையே தொடர்கிறது. ஜி.எஸ்.டி., சாலையில் பேரமனுார் பகுதியில், பல மாதங்களாக உயர்கோபுர மின் விளக்குகள் பழுதடைந்து உள்ளன. ஜி.எஸ்.டி., சாலை டேன்சி -- கீழக்கரணை வரை போதிய மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வேலைக்கு சென்று வரும் ஆண், பெண்கள் திருட்டு பயம், தெரு நாய்கள் துரத்துவது போன்றவற்றால் அச்சத்துடன் சென்று வரும் சூழல் உள்ளது. சிப்காட் மற்றும் கூடலுார் ஏரிக்கரை பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை, இறைச்சி கழிவுகள் மற்றும் கழிவு நீர் ஊற்றுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சமூக விரோதிகள், மின் விளக்குகள் எரியும் மின் கம்பங்களுக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விடுகின்றனர். எனவே மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம், அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மின் இணைப்பை துண்டிப்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மறைமலை நகரில் அகலமான சாலைகளில் குறைந்த அளவு வெளிச்சம் வரக்கூடிய மின் விளக்குகள் பல தெருக்களில் அமைக்கப்பட்டு உள்ளன. பல இடங்களில், மின்கம்பங்களில் செடி, கொடிகள் சூழ்ந்தும், விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில், அச்சத்துடன் சென்று வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம், மின் விளக்குகள் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.தமிழ்ச்செல்வி, மறைமலை நகர். தீர்மானம் நிறைவேற்றம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: மறைமலை நகர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 2,202 சுழல் விளக்குகள், 535 சோடியம் விளக்குகள், 2,703 சி.எப்.எல்., விளக்குகள், 3,662 எல்.இ.டி., விளக்குகள், 108 உயர்கோபுர மின் விளக்குகள் என, மொத்தம், 9,210 விளக்குகள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. டேன்சி -- கீழக்கரணை வரை சர்வீஸ் சாலையில் மின் விளக்குகள் அமைக்க, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.