மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற வழக்கு உதவி செயற்பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை
செங்கல்பட்டு:காஸ் நிரப்பும் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில், உதவி செயற்பொறியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையச் சேர்ந்தவர் ரவிக்குமார்.இவர், மடிப்பாக்கம் பகுதியில் புதிதாக 'எல்.பி.ஜி., காஸ்' நிரப்பும் நிலையத்திற்கு, 23 'கேவி' திறன் கொண்ட மின் இணைப்பு பெற, உரிய ஆவணங்களுடன் மடிப்பாக்கம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நடராஜன், 59, என்பவரிடம், 2013 ஜன., 18ம் தேதி விண்ணப்பித்தார்.இந்த மனுவை பரிந்துரை செய்ய நடராஜன், 10,000 ரூபாயை லஞ்சமாக ரவிக்குமாரிடம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத இவர், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, ரவிக்குமாரிடம் ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை போலீசார் கொடுத்து அனுப்பினர். இதை நடராஜனிடம் கொடுத்த போது, மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், செங்கல்பட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றினர். இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது.அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், உதவி செயற்பொறியாளர் நடராஜனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ, நேற்று தீர்ப்பளித்தார்.