போலீசாரை கொல்ல முயற்சி ரவுடி ஜாமின் மனு தள்ளுபடி
செங்கல்பட்டு,: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் சத்யா என்கிற சீர்ழகாழி சத்யா, 40. ரவுடி. இவர், சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ., மாநில வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்ஸ் சுதாகர், 50, என்பவரின் பிறந்த நாள் விழாவிற்காக, கடந்த ஜூன் 28ம் தேதி, மாமல்லபுரம் வந்தார்.அப்போது, மணமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, சத்யா வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிச்சென்றார்.அவரை துரத்தி பிடித்த போலீசார், கைது செய்து செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது, துப்பாக்கியை காட்டி கொலை செய்து விடுவதாக, போலீசாரை மிரட்டினார்.இதுகுறித்து, செங்கல்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதன்பின், மேற்கண்ட வழக்குகளில் ஜாமின் வழங்கக்கோரி, சத்யாவின் வழக்கறிஞர் செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த 20ம் தேதி மனு தாக்கல் செய்தார்.இம்மனு, முதன்மை மாவட்ட நீதிபதி முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.