திருக்குறள் படிக்க விழிப்புணர்வு பேரணி
திருப்போரூர்:திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில், பொது இடங்களில் திருக்குறள் பலகை வைத்தல், பள்ளி மாணவர்களுக்கு, திருக்குறள் பயிற்சி வழங்குதல், திருக்குறள் சார்ந்த பல திறன் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் உள்ளிட்டவற்றை நடத்தப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக, ' திருக்குறள் முழக்கம் மற்றும் நடைபயணம் ' என்ற தலைப்பில், விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.பேரவை தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். திருப்போரூர் மலைக்கோவில் நுழைவு வளைவு பகுதியில் துவங்கிய பேரணி, வடக்கு மாடவீதி, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி வழியாக முடிந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 200 மாணவ- - மாணவியர், 'திருக்குறளை வாசிப்போம், திருக்குறளை நேசிப்போம்; காலைப்படி, மாலைப்படி, திருக்குறள் என்னும் நுாலைப்படி' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். வீடு, வீடாக சென்று திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கினர்.