செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில், அனுமதியில்லாத தனியார் நிறுவனம், அரசியல் கட்சியினர் பேனர்கள் அகற்றுவதில், அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், பழைய பேருந்து நிலையம், ராட்டிணங்கிணறு, சப்- கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆகிய பகுதிகளில், தனியார் நிறுவனம் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், தலைவர்கள் பிறந்த நாள், வருகை தொடர்பான விளம்பர பேனர்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பகுதியில், அமைக்கப்படுகிறது. இதை அகற்றவேண்டிய, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டும் காணமல் உள்ளனர். கடந்த சில மாதங்களாக, பேனர் கலாசாரம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலான விளம்பர பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள் அதிகரித்துள்ளன. அரசில் கட்சிகள் மட்டும் இன்றி கட்சி பிரமுகர்களின் திருமண நிகழ்ச்சி, பிறந்தநாள் நிகழ்ச்சி, இறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகின்றன. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் உத்தரவை அலட்சியப்படுத்தி, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர். இதனால், பேருந்திற்காக செல்லும் பயணியர் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது, விபத்து பயத்துடன் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளது. நகராட்சி பகுதிகளில், விளம்பர பேனர்கள் வைப்பதற்கு, நகராட்சி நிர்வாகத்திடம், அனுமதிபெற வேண்டும். தனியார் விளம்பரங்கள் வணிக ரீதியாக இருந்தால், மாவட்ட நிர்வாகத்திடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். இந்த நடைமுறைகளை, யாரும் பின்பற்றுவதில்லை. பேனர் கலாசாரத்தை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் தவறிவறுகிறது. இதனால், பேனர்களை அப்புறப்படுத்த, சப்- கலெக்டர், தாசில்தார் ஆகியோர் நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.