காதலியின் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் கைது
முகப்பேர், முகப்பேர் கிழக்கு, சர்ச் சாலையைச் சேர்ந்தவர் மைதிலி, 63. கணவரை பிரிந்து, மகள் ரித்திகா, 22, என்பவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். ரித்திகா, போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.ரித்திகாவும், முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரைச் சேர்ந்த ஷியாம் கண்ணன், 22, என்பவரும், கல்லுாரியில் பயிலும்போதே காதலர்கள். இந்நிலையில், ஷியாம்கண்ணனுடன் வெளியே சென்ற ரித்திகா, நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, வீடு திரும்பியுள்ளார்.வீட்டிற்கு தாமதமாக வந்ததை, தாய் மைதிலி கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ரித்திகா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தகவலறிந்து வந்த ஷியாம் கண்ணன், ரித்திகாவை சமாதானம் செய்து, வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மைதிலி, மீண்டும் ரித்திகாவை கடுமையாக திட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த காதலன் ஷியாம்கண்ணன், அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், மைதிலியின் கழுத்தை கைகளால் நெரித்துள்ளார். இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் மயங்கி விழுந்தார்.அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மைதிலியை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தகவலறிந்து சென்ற, ஜெ.ஜெ.நகர் போலீசார், மைதிலியின் உடலை கைப்பற்றி, ஷியாம்கண்ணனை கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாம்கண்ணன், முகப்பேர், கோல்டன் ஜார்ஜ் நகரில் அறை எடுத்து தங்கி, ஐ.ஏ.எஸ்., போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தது தெரிந்தது.ஷியாம்கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று மாலை சிறையில் அடைத்தனர்.