மூதாட்டியிடம் செயின் பறிப்பு
மறைமலை நகர்:காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த ஆதனுார் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் மனைவி பாஞ்சாலி, 62 . நேற்று காலை சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்தார். கோவில் பிரகாரத்தை சுற்றிவந்த போது நுழைவு பகுதி அருகில் வழங்கப்பட்ட அன்னதானத்தை வாங்கி சாப்பிட்ட பின் பார்த்த போது, தன் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயின் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து மூதாட்டி கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். மறைமலை நகர் போலீசார் கோவிலில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அன்னதானம் வழங்கும் இடத்தில் ஐந்து பெண்கள் மூதாட்டியை சுற்றி நின்றனர். அதில் ஒரு பெண் பாஞ்சாலி கழுத்தில் இருந்த தங்க செயினை எடுக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு பகிரப்பட்டது. சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் பேருந்துக்காக காத்திருந்த ஐந்து பெண்களை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.