மின் கணக்கெடுப்பில் மாற்றம் வண்டலுாரில் நுகர்வோர் குழப்பம்
வண்டலுார்: வண்டலுாரில் கடந்த இரு மாதங்களாக, தொடர்ந்து மின்சார பயன்பாடு கணக்கெடுப்பு நடந்தது. இதனால், இனி மாதந்தோறும் கணக்கெ டுப்பு நடத்தும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதா என, நுகர்வோரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுாரில் உள்ள 15 ஊராட்சிகளில், 40,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில், கடந்த செப்., மற்றும் அக்., மாதங்களில், அடுத்தடுத்து தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால், 2021 தேர்தலில் அறிவிக்கப்பட்டது போல், இனி மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கெடுக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துவிட்டதாக, மின் நுகர்வோர் மத்தியில் தகவல் பரவியது. இது, நுகர் வோர் மத்தியில் கடும் குழப் பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வண்டலுார் மற்றும் மண்ணிவாக்கம் ஊராட்சி பகுதிகளைச் சேர்த்து, 26,079 மின் நுகர்வோர் உள்ளனர். இவர்களுக்கான உதவி பொறியாளர் அலுவலகம், வண்டலுாரில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நிர்வாக வசதிக்காக, இந்த இரு ஊராட்சிகளுக்கும் தனித்தனி உதவி பொறியாளர் அலுவலகம், கடந்த ஆக., மாதம் செயல்பாட்டிற்கு வந்தது. மொத்தமுள்ள மின் நுகர்வோரில் வண்டலுார் ஊராட்சிக்கு 8,639 மின் இணைப்புகள், மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு 17,440 மின் இணைப்புகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, தனித்தனி அலுவலகங்களாக பிரிக்கப்பட்டதால், வண்டலுாரின் சில வார்டுகளில் மட்டும், கடந்த இரு மாதங்களாக மின் கணக்கீடு நடைபெற்றது. இனி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே, மின் கணக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.