உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொள்முதல் நிலையங்களில் ஆந்திரா நெல் விற்பனை செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு

கொள்முதல் நிலையங்களில் ஆந்திரா நெல் விற்பனை செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில நெல் இரவு நேரத்தில் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், 1.86 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அனுமதி தற்போது, சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. ஒரு சில இடங்களில், நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், முதல்வர் ஸ்டாலின் உத்தர விட்டார். விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,545 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,500 ரூபாய் நிர்ணயம் செய்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய, துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும். குறைபாடு கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உத்தரவு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன், சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலை களுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் 77 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கி, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார். தற்போது இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - வி.சி., ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், ஆந்திர மாநில நெல் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டு, இரவு நேரத்தில் கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசியல் செல்வாக்கால் அட்டூழியம் இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: இங்கு, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் 40 கிலோ கொண்ட மூட்டைக்கு 55 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. இந்த பணத்தை அரசியல் கட்சி நிர்வாகிகளே பங்கு பிரித்துக் கொள்கின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கிடையில் தனியார் வியாபாரிகள், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஆந்திர மாநில நெல்லை கொண்டு வந்து, இங்கு செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர். கொள்முதல் நிலையங்களில், முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல், அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் நெல் விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில், பதிவு செய்யப்பட்டவர்கள் அடிப்படையில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். தனியார் வியாபா ரிகள் நெல் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர். முறைகேடுகளை தடுக்க குழு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், புள்ளியியல் உதவி இயக்குநர்கள் தலைமையில், வருவாய் ஆய்வாளர்களைக் கொண்ட, ஏழு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் நெல் வரத்தை கண்காணிக்க, காஞ்சிபுரம் விற்பனைக் குழு செயலர் தலைமையில், கள ஆய்வு குழுவும் செயல்பாட்டில் உள்ளது. மேலும் உதவிக்கு, மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 044 - 27427412- 27427414 மற்றும் மாநில நேரடி நெல் கொள்முதல் நிலைய உதவி எண்: 18005993540 ஆகியவற்றில் அழைக்கலாம். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் நெல்லை 'பதிவு முன்னுரிமை' முறையில் எடுப்பதில்லை. அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் நெல் உடனுக்குடன் விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நெல், தனியார் வியாபாரிகள் மூலமாக, இரவு நேரத்தில் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இப்பிரச்னைக்கு, உயர் நீதிமன்றம் செல்ல உள்ளோம். - எம்.வெங்கடேசன், விவசாய நலச்சங்க தலைவர், செங்கல்பட்டு மாவட்டம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை