முட்டுக்காடு கலைஞர் பன்னாட்டு மையம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
திருப்போரூர்:முட்டுக்காடு ஊராட்சியில் அமைய உள்ள கலைஞர் பன்னாட்டு மைய கட்டுமான பணிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின்,'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அடிக்கல் நாட்டினார்.தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க., முன்னாள் தலைவருமான கருணாநிதி நுாற்றாண்டு விழாவின் இலச்சினை வெளியீட்டு விழா, 2023 ஜூன் 2ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்கால தேவைக்கும் போதுமானதாக இல்லை.''இதை கருத்தில் கொண்டு 'கலைஞர் பன்னாட்டு அரங்கம்' மிக பிரமாண்டமாக முட்டுக்காடு கிழக்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்படும்,'' என அறிவித்தார்.அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, முட்டுக்காடில்,'கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்க மையம்' கட்ட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 5,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டுக் கூடம், 10,000 பேர் பார்வையிடும் வசதி கொண்ட கண்காட்சி அரங்கம் ஆகியன அமைய உள்ளன. மேலும், இந்த மையம் திறந்தவெளி அரங்கம், உணவு விடுதிகள், 10,000 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு வாகன நிறுத்த வசதி, சாலை வசதி, நுழைவாயில், சுற்றுச்சூழல் வசதி என, அனைத்து வசதிகளுடன் உலக தரத்தில் அமைக்கப்பட உள்ளது.இப்பணிகள் வரும் 2025ம் ஆண்டு இறுதி அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் முடிக்கவும், பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில், இதற்கான கட்டுமான பணிக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின்,'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று அடிக்கல் நாட்டினார்.விழாவின் போது செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலர் பையனுார் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.