குழந்தை வளர்ச்சி திட்ட ஆபீசுக்கு தனி கட்டடம் இல்லாததால் அவதி
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின், வட்டார அலுவலக கட்டடம் அமைந்துள்ளது.இக்கட்டடத்தின் ஒரு பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இங்கு, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கு தனி அறை மற்றும் பணியாளர்களுக்கு தனி அறைகள் உள்ளன.மேலும் புத்தகங்கள், மருந்து மாத்திரைகள் மற்றும் குழந்தைகள் மையத்திற்கு தேவைப்படும் பொருட்கள் இங்கு வைக்கப்பட்டு உள்ளன.அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள் உள்ளிட்டவை இங்குள்ள கூட்ட அரங்கில் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க அலுவலக கட்டடத்தில், புதிதாக பாலின வள மையம் துவக்கப்பட உள்ளது.இதனால், இந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை காலி செய்து தரக்கோரி, மகளிர் திட்ட அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாமல் தவித்து வருவதாக, பணியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்து அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.