நிதி ஆதாரம் காலியானதால் சம்பாதிக்க சி.எம்.டி.ஏ., திட்டம்
சென்னை: புதிய திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டும் வகையில், மறைமலை நகர், மணலி போன்ற திட்டங்களில், எஞ்சிய காலி மனைகளை ஏலம்விடும் பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. சென்னை பெருநகர் பகுதியில், எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடிப்படையில் கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பூங்கா மேம்பாடு, சமூக நலக்கூடம், காவல் நிலையம் கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள் நடக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், 3,400 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கு நிதி ஆதாரம் திரட்ட வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது. இந்நிலையில், எதிர்கால வருவாயை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புதிய திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, சி.எம்.டி.ஏ.,வின் பழைய திட்டங்களில் எஞ்சிய காலி மனைகளை விற்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. குறிப்பாக, மறைமலை நகர் துணை நகர திட்டத்தில் வரும் கூடலுார், சித்தாமனுார் தொழிற்பேட்டை, மணலி, மாதவரம் பேருந்து மற்றும் கனரக வாகன முணையம் ஆகியவற்றில் உள்ள காலி மனைகள், கடைகளை விற்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இதற்காக, காலி மனைகள் விபரம் சேகரிக்கப்பட்டு, அதற்கான விலை நிர்ணய பணிகள் முடிக்கப்பட்டன. இதன் அடிப்படையில், காலி மனைகள், கடைகளை ஏலம் வாயிலாக விற்கும் பணிகள் துவங்கியள்ளதாக சி.எம்.டி.ஏ., அதி காரிகள் தெரிவித்தனர்.