உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியாரால் குளம் ஆக்கிரமிப்பு மீட்க கலெக்டர் உத்தரவு

தனியாரால் குளம் ஆக்கிரமிப்பு மீட்க கலெக்டர் உத்தரவு

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள குளத்தை, தனியார் மெடிக்கல் அகாடமி ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில், அரசு புறம்போக்கு வகைப்பாட்டில், புல எண் 65ல், வண்ணான்குட்டை என்ற குளம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், தனியார் கல்வி நிறுவனம் இப்பகுதியில் நிலம் வாங்கி, பொறியியல் கல்லுாரி துவக்கி, சில ஆண்டுகள் நடத்தியது.குளம் கல்லுாரி வளாகத்திற்குள் இடம்பெற்று, குளம் ஆக்கிரமிக்கப்பட்டது. இக்குளத்தை மீட்க கோரி, பூஞ்சேரியைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற வழக்கறிஞர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விசாரணையில் இருந்தது.இதற்கிடையே, சில ஆண்டுகளுக்கு முன், வேறு தனியார் கல்வி நிறுவனம், பொறியியல் கல்லுாரியை வாங்கியது. அந்நிறுவனம், வெளிநாட்டு மருத்துவக் கல்லுாரிகளில் பயில்வோருக்கு பயிற்சியளிக்கும் 'மெடிக்கல் அகாடமி'யை நடத்துகிறது.இந்நிறுவன ஆக்கிரமிப்பிலிருந்து குளத்தை மீட்க கோரி, உயர்நீதிமன்றத்தில் ராஜ்குமார் வழக்கு தொடர்ந்தார்.குளத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், அகற்றப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது.இச்சூழலில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராதா, குளம் ஆக்கிரமிப்பு குறித்து புல தணிக்கை செய்தார். அதில் கல்வி நிறுவனம், 1.13 ஏக்கர் குளம் பகுதியை ஆக்கிரமித்து, அதை பராமரித்து செயற்கை நீரூற்று, நடைபாதை, செடிகள் ஆகியவற்றுடன் பராமரிப்பதும், குளம் பகுதியில் பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளதும் தெரிந்தது. இதற்கு அரசிடம் அனுமதியோ, உத்தரவோ பெறவில்லை என்பதும் தெரிந்தது.இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் அருண்ராஜுற்கு, தாசில்தார் அறிக்கை அளித்தார். அதைத்தொடர்ந்து, ஆட்சேபனைக்குரிய நீர்நிலை புறம்போக்கு என்பதாலும், அரசிடம் முன் அனுமதியோ, உத்தரவோ பெறப்படாமல், ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், மாவட்ட கலெக்டர் தெரிவித்து, குளம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, திருக்கழுக்குன்றம் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை