நுாறு நாள் வேலை வழங்க மறுப்பு தொன்னாடு ஊராட்சி செயலர் மீது புகார்
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்டு தொன்னாடு ஊராட்சி உள்ளது. மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், குளம் வெட்டும் பணி நடந்து வருகிறது.இந்தப் பணிக்கு, நேற்று முன்தினம் 100 நாள் வேலை திட்ட அட்டை வைத்துள்ள பணியாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர்.அந்த பணியாளர்களிடம், வீட்டு வரி செலுத்தாமல் வேலைக்கு வந்ததாகக் கூறி, 15க்கும் மேற்பட்டோரை, ஊராட்சி செயலர் மற்றும் பணி தள பொறுப்பாளர் திருப்பி அனுப்பி உள்ளனர்.அதனால், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளரிடம், பாதிக்கப்பட்ட மக்கள், 100 நாள் வேலை வழங்கக்கோரி புகார் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட மேலாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.இதுகுறித்து, சிவகாமி, 45, என்பவர் கூறியதாவது:வீட்டு வரி செலுத்தாத மக்களுக்கு, 100 நாள் வேலை வழங்க முடியாது என, 15க்கும் மேற்பட்ட நபர்களை, ஊராட்சி செயலர், வீட்டிற்கு திருப்பி அனுப்பி விட்டார்.வீட்டு வரிக்கான பணத்தை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஊராட்சி செயலர் பெற்றுக்கொண்டார். ஆனால், பணத்தை செலுத்தியதற்கான உரிய ரசீதை, இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை.வீட்டு வரி பணத்தை செலுத்தாமல், 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க முடியாது என, எங்களை வஞ்சிக்கிறார். எனவே, தொடர்ந்து மக்களை வஞ்சித்து வரும் ஊராட்சி செயலரை, வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.