அதிகாரி அறைக்கு பூட்டு மண்டல தலைவர் மீது புகார்
செம்பாக்கம்:தாம்பரம் மாநகராட்சியில், ஐந்து மண்டலங்கள் உள்ளன. அதில், 3வது மண்டல குழு தலைவராக சுயேச்சையாக வெற்றிப் பெற்ற பிரதீப் உள்ளார்.இந்த மண்டலத்தில், 10 மாதங்களாக மண்டலக்குழு கூட்டமே நடத்தப்படவில்லை. இதனால், மக்களின் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.தவிர, இந்த மண்டலத்தில் கோஷ்டி பூசல் அதிகரித்து, தங்களது வார்டுகள் புறக்கணிப்படுவதாக, தி.மு.க., கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.இந்த நிலையில், மண்டல உதவி செயற் பொறியாளராக பணியாற்றும் ரகுபதியின் அறைக்கு, அக்., 1ம் தேதி மாலை, மண்டல குழு தலைவர் பிரதீப் பூட்டு போட்டார்.அதிகாரியின் அறைக்கு பூட்டு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, நேற்று காலை, மாநகராட்சி செயற் பொறியாளர் ஞானவேல், பூட்டிய அறையை திறக்க சென்றார்.அப்போது, மண்டல தலைவர் பிரதீப் குறுக்கிட்டு, அதிகாரியுடன் தகராறு செய்து, அறையை திறக்கவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் கூறியதாவது:உதவி செயற்பொறியாளர் ரகுபதி அலுவலகத்தில் இருக்கும்போது, 3வது மண்டல குழு தலைவர் பிரதீப், அவருடன் தகராறு செய்து, அவரை வெளியேற்றி, அந்த அறைக்கு பூட்டு போட்டுள்ளார். தவிர, அநாகரிகமாக பேசியுள்ளார். ஒரு அதிகாரியின் அறைக்கு பூட்டு போட அவருக்கு மட்டுமின்றி யாருக்கும் அதிகாரம் இல்லை.இதனால், 3வது மண்டல குழு தலைவர் பிரதீப் மீது, அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசியது தொடர்பாக, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மண்டல குழு தலைவர் பிரதீப்பிடம் கேட்டபோது, ''3வது மண்டலத்தில் முறைகேடுகள் நடக்கின்றன. உதவி செயற் பொறியாளர், குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படுகிறார். இதை கேள்வி கேட்டால் தகுந்த பதில் இல்லை.''கோப்புகளை காண்பிக்குமாறு கேட்டால் காண்பிப்பதில்லை. அக்., 1ம் தேதி மாலை, கோப்புகளை காண்பிக்காமல் அறையை பூட்டி சென்றார். நான், வெளியில் உள்ள அறையை பூட்டினேன்,'' என்றார்.