தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள்...மந்தம்:சவுடு மண் எடுக்க கனிம வளத்துறை அனுமதி தாமதம்;போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிப்பு
செங்கல்பட்டு:புக்கத்துறை - உத்திரமேரூர், படாளம் - வையாவூர், மதுராந்தகம் - மோச்சேரி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு, ஏரியில் இருந்து சவுடு மண் எடுக்க கனிம வளத்துறை, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை ஆகிய துறைகளின் அனுமதி கிடைக்காததால், பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், பொதுமக்கள் சென்று வரும் வகையிலான நடை மேம்பாலத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தது.இதை முறையாக பராமரிக்காததால், நடைமேம்பாலம் சிதிலமடைந்து பழுதடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் நடைமேம்பாலத்தை பயன்படுத்துவதை தவிர்த்து, சாலையின் குறுக்கே கடந்து செல்கின்றனர். இதேபோல், வாகன ஓட்டிகளும் அபாய நிலையில் சாலையைக் கடந்து செல்கின்றனர்.மதுராந்தகம் அடுத்த மோச்சேரி, கருணாகரவிளாகம், அருந்ததிபாளையம், புதுார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக இங்கு கடப்பதால், நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இப்பகுதியில் விபத்தை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி இடைய மேம்பாலம், சிக்னல், அணுகு சாலை அமைக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதுபோன்று செங்கல்பட்டு அருகே புக்கத்துறை, படாளம் கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில், சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.இதனால், மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து செங்கல்பட்டு அடுத்த புக்கத்துறை, படாளம் கூட்டுச்சாலை, மதுராந்தகம் அருகே மோச்சேரி மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் கட்ட, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 90 கோடி ரூபாய் ஒதுக்கி, கடந்தாண்டு உத்தரவிட்டது. இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, கடந்தாண்டு அக்டோபரில் புக்கத்துறை - உத்திரமேரூர், படாளம் - வையாவூர், மதுராந்தகம் - மோச்சேரி, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் பணிகள் துவங்கி, மந்தமாக நடந்து வருகின்றன.மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு சவுடு மண் தேவைப்படுவதால், கனிம வளத்துறை, சுற்றுச்சூழல் துறை, வனத்துறைகளிடம் அனுமதி கோரி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்ததாரர்கள் மனு அளித்துள்ளனர்.ஆனால், ஏரியில் சவுடு மண் எடுக்க அனுமதி கிடைப்பதில், தாமதம் ஏற்படுகிறது. இதனால், மேம்பால பணிகள் மந்தமாக நடப்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அனுமதி கிடைத்ததும் வேகமெடுக்கும்
மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை - மோச்சேரி, புக்கத்துறை - உத்திரமேரூர், படாளம் - வையாவூர் மற்றும் திண்டிவனம் ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்கு, 90 கோடி ரூபாய் நிதியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டது. இப்பணிகளை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஏரியில் மண் எடுக்க, கனிம வளத்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை ஆகிய துறைகளிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன், பணிகள் வேகமாக நடைபெறும்.- தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள்,சென்னை மண்டலம்,சென்னை.