பேரமனுார், செட்டிபுண்ணியம், சோத்துப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி இழுபறி
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலைநகர், செட்டிபுண்ணியம், சோத்துப்பாக்கம் பகுதிகளில், ரயில்வே கடவுப்பாதை மேம்பாலப் பணியை பிரதமர் மோடி துவக்கி வைத்த நிலையில், இன்னும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளன. சென்னையின் புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியிருப்புகள், வர்த்தக மையங்கள் அதிகரித்துள்ளன.மறைமலைநகர், மகேந்திரா சிட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில், தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். தொழிற்சாலைக்கு சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன.மறைமலைநகர், செட்டிபுண்ணியம் ஆகிய பகுதியில், ரயில்வே கேட் உள்ளது. இங்குள்ள ரயில் பாதை வழியாக மின்சார ரயில்கள், தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் செல்கின்றன.அந்த நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால், வாகனங்கள் அணிவகுத்து சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதேபோல், மேல்மருவத்துார் -- சோத்துப்பாக்கம் இடையில், சோத்துப்பாக்கத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் பல நேரம், சோத்துப்பாக்கம் -- செய்யூர் வழியாக, கிழக்கு கடற்கரை செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.ரயில்வே கேட் மூடப்படும் போது, வாகன நெரிசல் ஏற்படுகிறது. நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய பணி, அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.'பீக்- ஹவர்' நேரம், பண்டிகைகள், விடுமுறை நாட்களில், இந்த இடங்களைக் கடக்க நீண்ட நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், கேட் திறக்கப்படும் போது முந்திக்கொண்டு செல்வதால், விபத்துக்கள் ஏற்படுகின்றன.இதனை தவிர்க்க, ரயில்வே நிர்வாகம் மற்றும் தமிழக அரசு, மேம்பாலம் கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, 2019 - 20ம் ஆண்டு, மறைமலைநகர் பகுதியில் மேம்பாலம் கட்ட நிலம் கையகப்படுத்த, 24.70 கோடி ரூபாயும், 2018- -19ம் ஆண்டு, செட்டிபுண்ணியம் - மகேந்திரா வேர்ல்டு சிட்டி பகுதியில் நிலம் கையகப்படுத்த, 32.31 கோடி ரூபாயும், சோத்துப்பாக்கம் பகுதியில் நிலம் கையகப்படுத்த, 15.32 கோடி ரூபாயும், தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.அதன் பின், செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை - திட்டங்கள் மற்றும் வருவாய்த் துறையினர், மேம்பாலம் அமைய உள்ள இடங்களில், நிலங்கள் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பணி முடிந்தவுடன், மேம்பாலம் கட்ட நிதி கேட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது மறைமலைநகர், செட்டிபுண்ணியம், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதியில், ரயில்வே தண்டவாளம், கேட் அமைந்துள்ள ரயில்வேக்கு சொந்தமான பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட, ரயில்வே நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது.இப்பணியை, பிரதரமர் மோடி, கடந்த பிப்ரவரி மாதம், 26ம் தேதி, காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். ஆனால், கடந்த 10 மாதங்களாக பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, மேம்பாலப் பணியை, ரயில்வே நிர்வாகம் துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.மறைமலைநகர் பேரமனுார், செட்டிபுண்ணியம், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதியில், மேம்பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இப்பணி முடிந்த பிறகு, மேம்பாலம் கட்ட நிதி கேட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.- வி.பி.நாராயணன்,கோட்ட பொறியாளர்நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள்செங்கல்பட்டு.