உழவர் சந்தை அருகே காய்கறி கடைகள் கட்டும் பணி துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு உழவர் சந்தை அருகே காய்கறி அங்காடியில் 62 புதிய கடைகள் கட்டும் பணி துவங்கியது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், மேட்டுத்தெருவிற்கு செல்லும் சாலையில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டி உள்ளனர். இப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால், கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்பின், செங்கல்பட்டு உழவர் சந்தை அருகில் காய்கறி அங்காடி வளாகத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இ ங் கு, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 2 கோடியே 58 லட்சம் ரூபாயில், 62 கடைகள் கட்ட முடிவு செய்து, நகராட்சி ஒப்புதல் வழங்கியது. இப்பணிக்கு, கடந்த ஆண்டு நவ., 16ம் தேதி டெண்டர் விடப்பட்டது. ஆனால், கடைகள் கட்டும் பணி துவக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியானது. இதையடுத்து காய்கறி அங்காடியில் 62 கடைகள் கட்ட பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. செங்கல்பட்டு தி.மு.க.,- எம்.எல்.ஏ., வரலட்சுமி, நகராட்சி தலைவர் தேன்மொழி, துணை த்தலைவர் அன்புச்செல்வன், ஆணையர் ஆண்டவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.