உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் சாப்பாட்டு செலவு மட்டும் ரூ.4.51 லட்சமாம் தாம்பரம் மாநகராட்சியில் பகல் கொள்ளை

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் சாப்பாட்டு செலவு மட்டும் ரூ.4.51 லட்சமாம் தாம்பரம் மாநகராட்சியில் பகல் கொள்ளை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின், 5வது மண்டலத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியதில், சாப்பாட்டு செலவு மட்டும், 4.51 லட்சம் ரூபாய் செலவானதாக, நாளை நடக்க இருக்கும் மாநகராட்சி கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நாளை நடக்கிறது. இதில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான செலவுகள் உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.இந்த கூட்டத்தில், 5வது மண்டலத்தில், ஆக., 23ம் தேதி நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமில், சாப்பாடு அளிக்க மட்டும், 4.51 லட்சம் ரூபாய் செலவானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த மருத்துவ முகாமில், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், எலும்பு மூட்டு, இதயம், நரம்பியல், காது - மூக்கு - தொண்டை, கண், தோல், காசநோய், ஸ்கேன், ரத்த அழுத்தம், சித்தா, பல் ஆகிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டன. இம்முகாமில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஆரம்ப சுகாதார பணியாளர்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், கர்ப்பிணியர், முதியோர், தன்னார்வலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், லேப் டெக்னீசியன்கள், துாய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் ஆகியோருக்கு உணவு அளிக்கப்பட்டது. இந்நிலையில், காலை மற்றும் மதிய உணவு, ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில் வழங்கிய செலவு, 4 லட்சத்து 51,500 ரூபாய் எனவும், இந்த நிதியை பொது நிதியில் மேற்கொள்ள, மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது. ஒரு மருத்துவ முகாம் நடத்தியதற்கு, சாப்பாட்டு செலவு மட்டும், 4.51 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது, கவுன்சிலர்கள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி