கூவத்துார் கடலுார் மீன் இறங்குதளத்தில் அபாய நிலை கட்டடங்களை இடிக்க முடிவு
கூவத்துார், கூவத்துார் அடுத்த, கடலுார் பெரியகுப்பம் மீனவ பகுதியில், மீன் இறங்குதளம், கடந்த 2012ல் அமைக்கப்பட்டது. மீனவர் பொருளாதாரம், மீன்பிடி தொழில் மேம்பாடு கருதி, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், மீன்வளத்துறை, அதை அமைத்தது.முதல்கட்டமாக, மீன் ஏலம், வலைபின்னல், வலை பாதுகாப்பு உள்ளிட்ட கூடங்கள், வங்கி அலுவலகம், மின்சார அறை என அமைக்கப்பட்டது. அடுத்து, 2 கோடி ரூபாய் மதிப்பில், மீன் பதப்படுத்தல், குளிர்பதன கிடங்குகள் ஆகியவையும் அமைக்கபட விருந்தது.இந்நிலையில், கடலரிப்பு காரணமாக, மீன் இறங்குதள வளாகம் வரை கடல்நீர் புகுந்து, வளாக சுற்றுச்சுவர் கடலில் அடித்துச்செல்லப்பட்டது. கடலரிப்பால் கடல்நீர் உட்புகுவதும் அதிகரித்து, கட்டடங்களை அலைகள் தாக்கி சேதமடைந்தன.கட்டடங்களை பாதுகாக்க கருதி, கடந்த 2015ல், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 'கேபியான் பாக்ஸ்' எனப்படும் தடுப்பு அரண் அமைக்கப்பட்டது. அத்தடுப்பும் கடலரிப்பில் சீரழிந்தது.மீன் இறங்குதள கட்டடங்கள், முற்றிலும் சேதமடைந்து, இடியும் அபாயத்தில் உள்ளதால், மீனவர்கள் அச்சப்படுகின்றனர். படகுகள், வலைகள் வைக்க இடமின்றி தவிக்கின்றனர். இது குறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியானது. இந்நிலையில், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனன், நேற்று ஆய்வு செய்தார். முற்றிலும் சேதமடைந்த கட்டடங்களை இடிப்பதாகவும், நன்றாக உள்ள கட்டடங்களை சீரமைப்பதாகவும், அவர் உறுதியளித்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.***