செங்கை வளர்ச்சி திட்டங்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்க முடிவு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினர் வேடப்பள்ளி ராம்சுந்தர், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடத்தினார். ஆய்வு
இதில், கலெக்டர் அருண்ராஜ், தேசிய பட்டியல் இனத்திற்க்கான ஆணைய இயக்குனர் டாக்டர் ரவிவர்மன், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, எஸ்.பி., சாய் பிரணித் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விடுதி செயல்பாடுகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட பணிகள், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்பட்ட கடன், வீட்டுமனை பட்டா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.அதன்பின், தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினர் வேடப்பள்ளி ராம்சுந்தர் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிரதம மந்திரி திட்டங்கள் குறித்து கலெக்டர் தெரிவித்தார்.ஆதிதிராவிடர், பழங்குடியினர் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், கலெக்டர் சிறப்பாக செய்து வருகிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன பணியாளர்களுக்கு முறையாக உயர்பதவி வழங்குவது குறித்தும், மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அறிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரதம மந்திரி திட்டப்பணிகள் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. மாவட்ட வளர்ச்சிக்காக தொழில், கல்வி, மாணவர்களுக்கு மானியங்கள் பெற்றுத் தரவும், ஆய்வு கூட்டத்தின் அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.