சென்னை டாக்டர் மீது தாக்குதல் செங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு:சென்னை அரசு மருத்துவமனையில், டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், டாக்டர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோயியல் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தியதில், அவர் படுகாயமடைந்தார்.இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், டாக்டர் பாலாஜியை தாக்கியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தனியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். நோயாளியுடன் வருவோருக்கு, உதவியாளர் பாஸ் வழங்க வேண்டும்.மருத்துவமனை நுழைவாயில் பகுதியில், 24 மணி நேரமும் பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றனர்.