சீரழிவு! நெரும்பூர் திருவாலீஸ்வரர் கோவில்... கண்டுகொள்ளாத அறநிலைய துறை
நெரும்பூர்:நெரும்பூரில் சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருவாலீஸ்வரர் கோவில், நீண்டகாலமாக பராமரிப்பின்றி சீரழிந்துள்ளது. கோவிலை புனரமைத்து மேம்படுத்த, அறநிலையத்துறை அக்கறை காட்டவில்லை என, பக்தர்கள் குமுறுகின்றனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூரில், திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. கி.பி., 994ல், முதலாம் ராஜராஜசோழன், இக்கோவிலை நிர்மாணித்துள்ளார்.திருவாலீஸ்வரர் கிழக்கு நோக்கியும், திரிபுரசுந்தரி தெற்கு நோக்கியும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றுள்ளனர். சன்னிதிகளுக்கு விமான கோபுரம் இல்லை. கருவறை, அர்த்த மண்டபம், மஹா மண்டபம் என, கோவில் அமைந்துள்ளது.வரலாறு
மஹா மண்டபத்தில் வலம்புரி விநாயகர், பாலசுப்பிரமணியர், நாகர்கள், காலபைரவர், ஐந்துதலை நாகத்தில் நடனமாடும் நர்த்தனகண்ணன், லிங்கத்திற்கு குடைவிரிக்கும் ஐந்து தலை நாகம், தன்வந்திரி ஆகியோர் வீற்றுள்ளனர்.அர்த்த மண்டபத்தில் விநாயகர், முருகர் உள்ளனர். கூரை தளத்தில், சூரிய, சந்திர கிரஹணம், யானை, மீன் ஆகியோர் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர்.மேலும், துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, விநாயகர் ஆகியோர், சன்னிதி பிரகார சுவரில் காணப்படுகின்றனர். கோவில் முன்புறம், சிறிய மண்டபத்தில் நந்தி தேவர் வீற்று, பலிபீடம் உள்ளது.சண்டிகேஸ்வரர் மண்டபம் உண்டு. கொடிமரம் இல்லை. கோவில் வளாகத்தின் தெற்கில், மூன்றுநிலை ராஜகோபுரம், வடக்கில் தீர்த்தக் கிணறு, கோவில் பின்புறம் குளம் ஆகியவையும் உள்ளன. நீண்டகாலத்திற்கு முன் சுற்றுச்சுவர் இருந்து, தற்போது அதன் அடையாளமே காணப்படுகிறது.நாகராஜ சுவாமி, தோஷ நிவர்த்திக்காக, உத்திரநாராயண கால சூரிய உதயத்தின்போது, திருவாலீஸ்வரரை வலம்வந்து, சூரியன், சந்திரன் ஆகியோரை வழிபட்டதாக இக்கோவில் வரலாறு.
வலியுறுத்தல்
முற்காலத்தில், நெருமூர் என இவ்வூர் விளங்கியது குறித்து, நெருமூரான மதுராந்தகநல்லுார் என, கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவனும் திருவாலீஸ்வரமுடையார் என விளங்கியுள்ளார்.சோழ, சம்புவராய, விஜயநகர மன்னர்கள் கோவிலை பராமரித்துள்ளனர். நிலம் உள்ளிட்டவற்றை தானமாக அளித்தது குறித்த கல்வெட்டுகளும் உள்ளன.இத்தகைய சிறப்புடன் விளங்கிய கோவில், தற்காலத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு கால வழிபாடும் நடக்கிறது.கோவிலை நீண்டகாலமாக பராமரிக்காமல் உருக்குலைந்து, புதர் சூழ்ந்து முற்றிலும் சீரழிந்துள்ளது. பழங்கால கோவிலை புனரமைக்க வேண்டிய அவசியம் கருதி, அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, “கோவிலை முழுதுமாக பிரித்து தான் புனரமைக்க வேண்டும். அதற்கான நிதி, நிர்வாகத்திடம் இல்லை. உபயதாரர் ஏற்பாடு செய்து, புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றனர்.