5 இடங்களில் மண்ணெண்ணெய் பகிர்வு நியாய விலைக்கடை விற்பனையாளர் நிம்மதி
செய்யூர்:செய்யூர் பகுதியில் செயல்படும் நியாய விலைக் கடைகளுக்கு, ஒரே இடத்தில் மண்ணெண்ணெய் பகிர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, கூடுதலாக நான்கு இடங்களில் மண்ணெண்ணெய் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால், விற்பனையாளர்கள் நிம்மதியடைந்து உள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பகுதியில், 176 நியாய விலை கடைகள் செயல்படுகின்றன.இதன் வாயிலாக அரிசி, சர்க்கரை, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் பல ஆண்டுகளாக, நியாய விலைக் கடைகளுக்கு நேரடியாக லாரிகளில் கொண்டு சென்று பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது.கடந்த சில மாதங்களாக, பொதுவான இடத்தில் லாரியை நிறுத்தி, நியாய விலைக் கடை விற்பனையாளர்களை வரவழைத்து மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.இதனால், விற்பனையாளர்கள் நேரடியாக சென்று மண்ணெண்ணெய் வழங்கி வர வேண்டிய சூழல் ஏற்பட்டு சித்தாமூர், சோத்துப்பாக்கம் போன்ற பகுதிகளில் லாரி நிறுத்தப்படுகின்றன.இதனால் பவுஞ்சூர், கூவத்துார் பகுதியில் உள்ள விற்பனையாளர்கள் நீண்ட துாரம் வந்து வாங்கிச் செல்ல வேண்டி இருந்ததால், பெண் விற்பனையாளர்கள் சிரமப்பட்டனர்.இதனால், பெண் விற்பனையாளர்கள் எளிதாக மண்ணெண்ணெய் வழங்கிச் செல்ல ஏதுவாக, பல்வேறு இடங்களில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்க, பொது விநியோக திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடந்த சில நாட்களுக்கு முன், நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, இந்த மாதம் நெற்குணப்பட்டு, எல்லையம்மன் கோவில், கடப்பாக்கம், சித்தாமூர், சோத்துப்பாக்கம் என, ஐந்து இடங்களில் மண்ணெண்ணெய் பகிர்ந்தளிக்கப்பட்டது.இதனால், அனைத்து நியாய விலைக்கடை விற்பனையாளர்களும் நிம்மதியடைந்து, மண்ணெண்ணெயை எளிதாக பெற்றுச் சென்றனர்.